அருள்மிகு பட்டீசுவரர் சுவாமி திருக்கோயில் - வரலாறு

பேரூர்,கோயமுத்தூர்

வரலாறு :

    இறைவன் பட்டீசுவரசுவாமி,இறைவிக்குப் பச்சைநாயகி என்று தமிழிலும், மரகதவல்லி என்று வடமொழியிலும் திருப்பெயர்கள் வழங்கப்படுகிறது, சிவன்கோயில் என்றாலும் சிற்பங்களில் வைணவமும் ஏராளமாக இணைந்துள்ளது. ஆஞ்சநேயர், ஸ்ரீமாய கிருஷ்ணர் என்று அங்காங்கே தூண்களில் கலையுடன் சமய ஒற்றுமையும் சேர்ந்து மிளிர்கிறது.

    பேரூர் நகரின் வரலாற்றைப் பார்க்கையில், இக்கோயிலில் பலவிதக்கலைப்பாணிகளும் சங்கமித்துள்ளது அதிசயமில்லை என்று புரிகிறது. அகழ்வாராய்ச்சிகளின் போது ரோமானிய நாணயங்கள் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது கி.மு. காலத்தில் தோன்றிய ஊர். பின்னர் கி.பி.ஏழாம் நூற்றாண்டு வரை, பல்லவர்கள், சேர, சோழ ஆதிக்கம், கொங்கு, பாண்டியர் ஆட்சி, விஜய நகர அரசர்களின் கட்டுப்பாடு, மதுரை நாயக்கர்களின் அதிகாரம், இறுதியாக மைசூர் மன்னர்களின் அரசாங்கம் - என்று தென்னாட்டில் முக்கிய வம்சத்து அரசரகளின் கொடி நாட்டிய இடம் இப்பகுதி.

    ‘ஆரூரார் பேரூரார்’ என்றும் ‘பேரூர் பிரமபுரம் பேராவூரும்’ என்றும் அப்பர் சுவாமிகள் தனது சேஷத்திரக்கோவையில் இரண்டிடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். எனவே சுமார் கி.பி. 650க்கு முன்னரே பேரூர் பட்டிசுவரர் ஆலயம் கட்டப்பட்டிருக்க வேண்டும். பேரூர் பற்றிய தனித்தேவாரம் மறைந்து போய் விட்டதாகக் கருதப்படுகிறது.

கச்சியப்ப முனிவர் இத்தலம் பற்றிய விரிவான தலவரலாறு இயற்றியுள்ளார்.

    சுயம்புவாக சுவாமி தோன்றியது. குயிலாயத்தில், உமாதேவி சமேதராக சிவபெருமான் இருக்கையில், நந்தி பகவான் அவரிடத்தில் “தாங்கள் எழுந்தருளியுள்ள தலங்களுள் இந்தக் கயிலாயத்திற்கு நிகராகக் கருதக்கூடியது எது” என ஒரு சந்தேகம் கேட்க, அதற்கு பெருமான பதில் கூறியபோது “உத்தர கயிலாயம், மத்திய கயிலாயம், தட்சிண கயிலாயம் என மூன்று உள்ளன. அவை ஒத்த சிறப்புடையவை தாம். ஆனால், எளிய மனிதரும் முக்தி அடையக்கூடிய திருத்தலச்சிறப்பு திருப்பேரூர் என்கிற தட்சிண கயிலாயத்துக்கே உண்டு “என்றாராம்.”

நாரதேசுவரம் :

    இந்த மகிமையைக் கேட்டுக் கொண்டிருந்த முருக பெருமான் அதை நாரதருக்கு உணர்த்த, நாரதர் உடனே கொங்கு நாடு சென்று வெள்ளியங்கிரி என்ற மலையில் உமாதேவியுடன் உறையும் சிவபெருமானைத் தரிசித்தாராம். (நாரதர் அன்று தரிசனம் செய்ததாகக் கூறப்படுகின்ற திருக்கோயில் பட்டீசுவரர் ஆலயத்துக்குச் சற்றுத்தொலைவில் அமைந்திருந்தது.)

    இந்த தரிசனத்தை முடித்துக் கொண்ட முனிவர், காஞ்சிமா நதிக்கரையோரத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, அதன் அபிடேகத்துக்கென ஒரு தீர்த்ததையும் உருவாக்கி ஆராதனை செய்தாராம். நாரதேசுவரம் என்று இந்த ஆலயத்துக்குப் பெயர் உண்டாயிற்றூ. நாரதர் வந்தடைந்த வெள்ளியங்கிரி முதலான ஐந்து மலைகள் அரண் போல் சுழ, காஞ்சி நதி அம்புபோல் அவற்றை ஒட்டிப்பாய எழிலான இயற்கைச் சூழலின் மையத்தில் கோயில் கொண்டிருக்கிறார் பட்டிசுவரப் பெருமான்.

நாற்று நட்ட பெருவாழ்வு :

    ‘சர்வமும் தானே’ என்கிற தத்துவத்தை சுந்திரமூர்த்தி நாயனாருக்கு உணர்த்த விரும்பினார் சிவபெருமான். அதன் பொருட்டு பரவையாருடன் நாயனார். திருப்பேரூர் வந்தடைந்த போது விவசாயக்குடிமகனாக அவதாரமெடுத்தார். பெருமான் பள்ளன் விவசாயியாகவும், உமாதேவி பள்ளி விவசாயப்பெண்ணாகவும் மாறி நாற்று நடப்போனார்கள். தேவர்களும், சிவகணகங்களும் உதவியாளர்களாய் வந்தார்கள். இந்த நாற்ற நடு திருவிழா நடந்து கொண்டிருக்கையில் சுந்தரர் கோயிலுக்குப் போயிருக்கிறார். அங்கே பெருமானைக் காணாமல் நந்திதேவரிடம் விசாரித்திருக்கிறார். நாற்று நடவுக்குச் செல்லும் முன், தம் நண்பாரைப் பற்றி நன்கறிந்த இறைவன் நந்தி தேவரிடம் ‘அவன் கேட்டால் என் இருப்பிடம் உரைக்காதே’ என்ற எச்சரித்துக் சென்றார். எச்சரிக்கையை மீறி நந்தி தேவர் சுந்தரரிடம் உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். சுந்தரும் காஞ்சி நதிக்கரையில் நாற்று நட்டுக் கொண்டிருந்த பெருமானை தரிசித்து மகிழந்தாரம்.

    இதன் பின்னர் அந்த நதியில் நீராடி மீண்டும் கோயிலுக்குத் திரும்பியிருக்கிறார் பெருமான். நந்தி தம் சொல் மீறியதற்காகக் கோபம் கொண்டு, கையிலிருந்த மண் வெட்டியால் நந்தியின் தாடையில் அடித்து விட்டாராம். (நந்தி தேவரின் தாடை சற்று சப்பட்டையாக இந்தக் கோயிலில் காட்சியளிக்கிறது). பிறகு நந்தி, மன்னிப்பு வேண்டித் தவமிருக்க, தமது தாண்டவ தரிசனத்தை அவருக்கு அளித்திருக்கிறார்.

    திருப்பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சனமும் ஆக கோலாகலமாய் நடக்கிறது. காஞ்சி நதிக்கரையில் நாற்று நடும் திருவிழா இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.

பட்டிபுரம் - காமதேனுபுரம் - பட்டிநாதர் :

    ஒரு சமயம் பிரும்ம தேவர் படைப்புத்தொழிலினிடையே சோர்வுற்றறுக் கண்ணயர்ந்து விட்டாராம். இதை அறிந்த மகாவிஷ்ணு காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரும்மாவினுடைய படைப்புத்தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டு இருக்கிறர். அதன்படி காமதேனுவும் இமயமலையில் அருந்தவமிருந்ததராம். ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை.

    அச்சமயம் நாரத முனிவர் தரம் வழிபட்ட தஷிணகைலாசம் பற்றிச்சொல்ல, காமதேனுவும் கன்றுடன் அதே இடத்தை அடைந்தது, அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சி நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலாபிஷேகம் செய்து தவமிருந்தது ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை விளையாட்டாய்க் குலைத்து விட்டது. கன்றின் குளம்படி சிவபெருமானின் திருமுடியில் அழுந்தப் பதிந்து விட்டது.

    பதறிப்போன காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபொருமான் தோன்றினார். “பார்வதி தேவியின் வளைத் தழும்மை என் மார்பகத்தில் ஏற்றது போல் உன் கன்றின் குளம்படித் தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்று ஆறுதல் கூறினார்.

    “இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டும் சிருஷ்டி ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதை திருக்கருவூரிலே அருளுகிறேன். இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தைக் காணலாம். உன் நினைவாக இத்தலம் பட்டிபுரம் காமதேனுபுரம் என்று வழங்கப்படட்டும். எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும்” என்று அருளினார். இந்த புராணத்தை மெய்ப்பிக்கும் வகையில் பட்டிசுவர பிரானின் திருமுடியில் குளம்படித்தழும்பை இன்றும் காணலாம்.

    இத்திருக்கோயிலில் முருகப்பெருமான், விசுவநாதருக்கும், விசாலாட்சி அம்மையாருக்கும் நடுவில் மேற்கு முகமாக நின்ற கோலத்தில் பால தண்டபாணியாகக் காட்சியளிக்கின்றார்.