அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில் - சுற்றுலா தளங்கள்

பேரூர், கோயமுத்தூர்.

கோவைக் குற்றாலம் :

    கோவையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், சிறுவாணி நதியில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதால் மாலை 5 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை.

நொய்யல் ஆறு :

    வெள்ளிங்கிரி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு பெரியாறு சின்னாறுகளுடன் கலக்கிறது. பேரூர் வழியில் ஓடி வரும் போது காஞ்சி மகாநதி என்றும் சிறப்பு பெருகிறது. இது கோவை நகர பகுதிகளில் 15 கி.மீ. பாய்கிறது. பருவமழையால் மட்டுமே இதில் தண்ணீர் வரும்.

சிறுவாணி அணைக்கட்டு :

    பவானி நதியின் துணைநதியான சிறுவாணி கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகிறது. அங்கு அட்டப்பாடி பள்ளத்தாக்கு வழியாக வடகிழக்கே ஓடி நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திற்கும் மேற்கே பவானியுடன் கலக்கிறது. இந்த சிறுவாணி ஆற்றில் ஒரு சிறு அணைகட்டி அந்த அணையில் தேங்கிய நீரை ஒரு குகை மூலம் மலையின் மறுபுறம் அதாவது கிழக்குப் பக்கம் கொண்டு வந்து கோவை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது

    அணையின் கட்டுமானப்பணி 1927 – தொடங்கப்பட்டு 1931-ல் முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 23 அடிகளாகும். நகர வளர்ச்சி, மக்கள்தொகைப் பெருக்கம் இவற்றின் காரணமாக ஏற்பட்ட குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க இந்த அணைக்குக் கீழே 2.2 கி.மீட்டர் தொலைவில் மூத்திகுளம் நீர்வீழ்ச்சி நீர், கோபி ஆறு, அணசோலை ஆறு மற்றும் பட்டி ஆறு ஆகியவற்றின் நீர்களைத் தேக்கும் விதத்தில் 1984 - ஆம் ஆண்டு புதிய அணை கட்டப்பட்டது. இவ்விரு அணைகளிலிருந்தும் பல மில்லியன் காலன் குடிநீர் கோவை மாநகருக்கு விநியோகம் செய்யப்பட்டுகிறது. இந்தியாவின் வேறெந்த நகருக்கும் கிடைக்காத தூய்மையான, சுவைமிக்க இச்சிறுவாணி நீர் கோவை மக்களுக்குக் கிடைத்த அரிய வரப்பிரசாதமாகும். கோவைக்கு மேற்கே 37 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிறுவாணி அணைக்கட்டும், நீர்விழ்ச்சி, இவ்வழியில் அமைந்துள்ள கோவை குற்றாலம் எனப்படும் முத்தி குளம், வைதேகி நீர்விழ்ச்சியும் அமைந்துள்ளது.

வெள்ளியங்கிரி மலை :

    கோவையிலிருந்து மேற்கே 37 கி.மீ தூரத்தில் பூண்டி எனப்படும் வெள்ளியங்கிரித் திருத்தலம் அமைந்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலைகளின் பிரம்மாண்டமான வடிவங்களில் ஒரு பகுதியாக விளங்குகிற இங்கே சிவபெருமான் லிங்கத்திரு மேனியராக எழுந்தருளியுள்ளார் அடிவாரத்திலிருந்து அடுக்காக தொடரும் மலைகளுக்கு அப்பால் உயரமான இடத்தை தனக்குரிய தலமாக தேர்ந்தடுத்துள்ளார் நில மட்டத்திலிருந்து 5400 மீட்டர் தூரத்திலும், 1200 மீட்டர் உயரத்திலும் வெள்ளிங்கிரி ஆண்டவன் குகைகோயில் பக்தி மணம் கமல அமையப்பெற்றுள்ளது.

    கொங்கு நாட்டின் மேற்கு எல்லையாக விளங்குகிற இந்த மலை கோயிலுக்கு வருடத்தின் மாசி, பங்குனி, சித்திரை குறிப்பிட்ட மாதங்களில் மட்டும்தான் பக்தர்கள் சென்று வருகின்றனர். வெள்ளை விநாயகர் ஆலயம், வழுக்குபாறை, பாம்பாட்டிமலை, கைதட்டிசுனை, சீதை வனம், பொய்ப்பாலம் நாம் செல்கிற வழிகளில் மலைகளின் முக்கிய அம்சமாக விளங்குகிறது. வெள்ளிங்கிரி மலைக்கும் பின்புறம் இருப்பது கேரளபகுதியாகும். வெள்ளிங்கிரியின் தென்பகுதியில்தான் சிறுவாணி அணைக்கட்டும் உள்ளது. இத்திருத்தலத்தை அருணகிரி நாதார் பக்தி உள்ளத்தால் பூஜித்து பாடியுள்ளார்.

மருதமலை :

    கோவையிலிருந்து வடமேற்கே 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. முருக கடவுளின் ஏழாவது படை வீடாக சிறப்பு பெற்றுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கிற இந்த மலையின் மத்திய பகுதியில் மருதாசலக் கடவுளின் திருக்கோயில் மகிமையோடு விளங்குகிறது. அடிவாரத்தை கடந்து மேலே சற்று தூரம் சென்றவுடன் தான்தோன்றி விநாயகர் காட்சியளிக்கிறர். உளிபடாத இவரின் உன்னத தோற்றம் உள்ளத்தை உதயக்கதிராக தீண்டுகிறது. கோயிலின் வலதுபுறம் தலவிருட்சமாகிய மருதமரம் உள்ளது. மருதமலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

    வெள்ளியங்கிரியை சிவபெருமானின் உருவமாகவும் நீலி மலையை பார்வதியின் உருவமாகவும், மருதமலை முருகனின் உருவமாகவும், ஒப்பிட்டு மும்மூர்த்திகளாகப் பேரூர் தலபுராணம் கணக்கிடுகிறது. கருவரையின் உள்ளேயிலிருந்து கிழக்கு நோக்கிய வண்ணம் தண்டாயுதம் கையில் கொண்டு அருள் ததும்பிய மருதாசல மூர்த்தி காட்சி தருகிறார் பரவசம் மிகுதியாகி ஈடு இணையில்லாத பக்தியின்பம் உள்ளத்தில் பிரவகித்து உடலெங்கும் நிறைகிறது. மருதமலை முருகனை வழிபட்டு பாம்பாட்டி சித்தர் தவம் மேற்கொண்ட குகையாகும். இது கொங்கு நாட்டு சித்தர்களின் முக்கியமானவராக விளங்கிய அவர் இந்த இறைவனின் அணுகிரம் பெற்று இங்கேயே ஐக்கியமாகிவிட்டார். தினசரி பூஜைகளும், முருக கடவுளுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜைகளும், முக்கிய நாட்களில் நாள் முழுக்க பூஜைகளும் நடைபெறுகிறது.

ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயில் :

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து தென்மேற்கே 15 கி.மீ தூரத்தில் ஆனைமலையிலிருந்து சேத்துமடை செல்லும் பிரதான சாலையில் மாசாணியம்மன் கோவில் நுழைவு வாயில் உள்ளது. கொடுங்கோண்மையை எதிர்க்கும் போது மாரியம்மனாய் உருவெடுக்கும் இந்த மாதேவி மாசாணியம்மனாக இருந்து மகிமை புரிகிறாள். இந்த கோவில் மயான மண்ணில் அமைந்திருப்பதாலும், மூலவரான அம்மனும் மயான மண்ணில் குடிகொண்டு விளங்குவதாலும் மாசாணியம்மன் என்னும் பெயர் அழைப்புப் பெயராக அமைந்து பின்னர் நிலைபெயராகிவிட்டது. 17 அடி நீளமுள்ள பெரிய உருவமாக மேற்கில் தலைவைத்து கிழக்கில் கால்கலை நீட்டி படுத்த நிலையில் காட்சி தருகிற இந்த அம்மனின் திருக் கோலமானது பார்ப்பவர்களுக்கு மெய் சிலிர்ப்பை உண்டாக்குகிறது. இங்கு வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், மாந்திரீகம் ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்பு இருந்தால் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

    பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களும் , சொத்துக்களை பரிகொடுத்தவர்களும், திருட்டு போன்ற ஏமாற்றங்களுக்கு ஆளானவர்களும் இங்கு வந்து அம்மனின் முன்னால் நின்று முறையிட்டால் எதிராளிகள் மிகுந்த தண்டனைக்கு ஆளாகின்றனர். மாசாணியம்மன் கோவிலில் தினசரி மூன்று கால பூஜைகளும் செவ்வாய், வெள்ளி நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. தையம்மாவாசை அன்று கொடியேற்றம் செய்வித்து பதினேழாம் நாளில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்று வருகிறது.

அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் :

    கொங்கு நாடாம் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை வட்டத்தில் அமைந்துள்ள இந்து சமய திருக்கோயில்களில் இயற்கை எழில் கொஞ்சும் அருள்மிகு அமணலிங்கேஷ்வரர் சுவாமி திருக்கோயில் பழமையும் பெருமையும் கொண்ட திருத்தலமாக போற்றப்படுகிரது. சீறும் சிறப்பும் மிக்க இத்திருக்கோயில் உடுமலைபேட்டைக்கு தெற்கே 21 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆறுபடை வீடுகளில் சிறந்து விளங்கும் பழனிக்கு தென்மேற்க்கே 45 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆனைமலைத் தொடர்ச்சியில் அழகுற அமைந்துள்ளது.

ஈச்சனாரி விநாயகர் :

    கோவையிலிருந்து 10 கி.மீ தூரத்தில் பொள்ளாச்சி செல்லும் பிரதான சாலையில் ஈச்சனாரி விநாயகர் திருக் கோயில் அமைக்கபட்டுள்ளது. சிறியதாக இருந்து பழைய கோயிலை பின்பு பெரியதாக கட்டி கும்பாபிசேகம் நிகழ்த்தியுள்ளனர். கிழக்குப் பார்த்துள்ள கருவறையில் பெரிய தோற்றத்தில் வீற்றிருக்கிற விநாயகப் பெருமான் பக்தர்களின் நெஞ்சங்களை குளிர்வித்து அருள் வழங்குகிற வல்லமை யோடு காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனைய பண்டிகை நாட்களிலும் மாதத்தின் முக்கிய நாட்களிலும் இங்கு விசேச பூஜைகள் நிகழ்த்தப்படுகிறது. ஞானசம்பந்தரின், திருநாவுக்கரசரின், தேவாரங்களும், திருமூலரின் திருமந்திரமும் மற்றும் பலரின் பாடல்களும் விநாயகப் பெருமானின் பெருமையை போற்றுகின்றன.

தண்டு மாரியம்மன் திருக்கோயில் :

    கோவை மாநகரில் அவினாசி நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி இந்த இறைவியின் திருக் கோவில் அமையப் பெற்றுள்ளது. கொங்கு நாட்டு கோட்டைகளில் முக்கியமானதாக விளங்கிய கோயம்புத்தூர் கோட்டை 1768 லிருந்து 1791 ஆம் ஆண்டு வரை மூன்று தடவை முற்றுகையிடப்பட்டது. ஆங்கிலேய படைகளுடன் திப்பு சுல்தான் படைகள் மும்முரமாக மோதிக் கொண்டிருந்த சமயம் இதில் கலந்து கொள்ள மைசூர் படைகளும் வந்து சேர்ந்து இருந்தன. மைசூரிலிருந்து வந்த படைகளுடன் ஒரு படைக்கலமாக இந்த அம்மனின் லிங்க வடிவத்திலான உருவமும் கலந்து கொண்டு வந்து சேர்ந்து விட்டது. போர் முடிந்து புறப்படும் போது இந்த லிங்கத்தை எடுத்து சென்று விட்டனர். ஆனால் அங்கு சென்று பார்த்தால் இந்த லிங்கம் மாயமாய் மறைந்து விட்டது. மறுபடியும் இங்கு வந்து பார்த்தபோது மாரியம்மன் இங்கேயே குடியமர்ந்திருக்கின்ற அபூர்வம் அவர்களுக்கு புலப்பட்டிருக்கிறது. இதை எடுத்த செல்ல முயன்றும் அவர்களால் முடியவில்லை.

    படைக்கலன்களுக்கு தண்டு என்று பொருள் அதனாலேயே தண்டுமாரியம்மன் எனும் பெயர் நிலைபெயராகிவிட்டது. ஒவ்வாரு ஆண்டும் சித்திரை மாத்தின் முதல் செவ்வாய் கிழமை தொடங்கி 13 நாட்களுக்கு பிரம்மாத்சவமும், ஆண்டு திருவிழாவும் நடைபெற்று வருகிறது. அது தவிர வருடத்தின் முக்கிய தினங்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.